கவிஞர் மா.சங்கர் அவர்களின் என்னவளே என்ற கவிதைத் தொகுப்பை வேர்களைத்தேடி பதிப்பகம் வழியாக வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன். சங்கர் அவர்களை கடந்த ஏழு ஆண்டுகளாக அறிவேன். தமிழின் மீது மிகுந்த பற்றுடையவர். குறிப்பாக நாட்டுப்புற மரபுகள் மீது ஆழ்ந்த ஈடுபாடு உடையவர். இளங்கலை தமிழ் பயிலும்போதே நூல் எழுதும் தகுதியை வளர்த்துக்கொண்டார். கல்வியியல் பயிலும்போது தன் எழுத்துக்களை மேலும் பண்படுத்திக்கொண்டார். முதுகலை பயிலும்போது வெளியிடப்படும் இவரது என்னவளே என்ற இந்த நூல் இவரது  அனுபவத்தின் வெளிப்பாகவும், உணர்ச்சிகளின் குறியீடாகவும் எழுதப்பட்டுள்ளது.
       நேர்த்தியான சொல்தேர்வு, நாட்டுப்புற பேச்சு மற்றும் வாழ்க்கைச் சூழல்களைக் கண்முன் நிறுத்திய விதம், சரியான தலைப்புகள் என வாசிப்போரை வசப்படுத்தும் கூறுகள் பலவற்றையும் இந்நூலில் காணமுடிகிறது.
       கிராமத்தின் வாசம் வீசும் காதல் கவிதைகள் பலவற்றை வாசிக்கும்போது சங்க இலக்கியங்களின்; தாக்கத்தையும் காணமுடிகிறது.
       இந்தக் கவிதைகளை வாசிப்பதில் சில தடைகளும் உண்டு....
ஆம் சில கவிதைகளில் பயன்படுத்தப்பட்ட மண்வாசமிக்க வார்த்தைகள் நம்மைக் கட்டிப்போட்டுவிடுகின்றன. சில  கவிதைகளில் உள்ள உணர்ச்சிகள் நம்மை மெய்சிலிர்க்கவைக்கின்றன. சில கவிதைச் சூழல்கள் நம் வாழ்க்கையை நினைவுகொள்ளச் செய்கின்றன.
       ஓலக்குடிசை, என்ற கவிதையை வாசிக்கும்போது ஓலையோடு நம் மனசும் பறந்துவிடுகிறது. மனசுக்குள்ள உன் நெனப்பு என்ற கவிதை நெடுநல்வாடையை நினைவு படுத்துகிறது. பைத்தியக்கார மனசு என்ற கவிதை திரையிசைப் பாடலுக்கான கூறுகளுடன் திகழ்கிறது. நான் என்னானு சொல்லி அழ என்ற கவிதை வாசிப்பின் முடிவில் கண்களில் நீர் கசியச் செய்கிறது. தேடித் திரிகையில் என்ற கவிதையில் வாசிப்பவர்கள் தொலைந்துபோக வாய்ப்புள்ளது.
       காலங்கள் மாறலாம், காட்சிகள் மாறலாம், இலக்கியங்கள் மாறலாம், பாடுபொருள் மாறலாம் என்றாலும் எக்காலத்திலும் காதல் மாறுவதில்லை. காதலைச் சொல்லும் கவிஞர்கள் தான் தம்முள் எத்தனை வண்ணங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள்.  
       நாட்டுப்புறவியல் ஆய்வாளராகத் தமிழுலகம் நன்கறிந்த மா.சங்கர், என்னவளே என்ற இந்தக் கவிதை நூல் வழியாகத் தமிழுலகில் முத்திரை பதித்து மேலும் பல கவிதை நூல்களைப் படைக்கவேண்டும் என அன்புடன் வாழ்த்துகிறேன்.

நூல் விலை - ரூபாய் 60
மின்னஞ்சல் - verkalaithedipublication@gmail.com 

அலைபேசி - 9524439008

Post a Comment

Previous Post Next Post