இந்த உலகம் அழகானது, இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிர்களும் தனித்துவமானவை. இம்மண்ணில் வாழும் பல்வேறு உயிர்கள், ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை வகைப்படுத்தப்படுகின்றன. மனிதன் மட்டும் ஆறாவது அறிவு என்னும் சிந்திக்கும் ஆற்றல் பெற்றுள்ளான். இந்த சிந்திக்கும் ஆற்றலானது பிற உயிர்களை மனிதன் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அடிப்படையாக அமைந்தது. பிற உயிர்களின் அனுபவங்கள் யாவும் அவற்றின் மரபியல் கூறுகள் வழியாக அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுகின்றன. ஆனால் மனிதனுக்கு மரபியல் கூறுகள் மட்டுமின்றி, கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்புப்பட்டையங்கள், நூல்கள், இணையதள பதிவுகள் என பல வடிவங்களில் அனுபவங்கள் கிடைக்கின்றன. அதனால் காலந்தோறும் மனிதனின் அறிவு வளர்ச்சி என்பது புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திடுகிறது.
            தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று (236) என்பார் வள்ளுவர்.
எந்தத் துறையிலும் புகழுடன் விளங்கவேண்டும் என்ற விருப்பம் ஒவ்வொருவருக்கும் உண்டு. என்றாலும் எல்லோரும் புகழுடன் வாழ்ந்து மறைவதில்லை. புகழ் பெறும் படி அகன்ற  உலகத்தை  ஆட்சி செய்து மறைந்தவா்கள், கரையில் மோதி ஒலிக்கும் ஆரவாரமிக்க கடலின் அலைகளால் தள்ளப்பட்ட மணலைக் காட்டிலும் பலராவர் என்பார் மாங்குடி மருதனார். புகழ்பெற வாழ்ந்து மறைந்தவர்களே இவ்வுலகில் நினைவில் கொள்ளப்படுகிறார்கள். புகழின்றி வாழ்ந்து மறைந்தவர்களை வரலாறு பதிவு செய்வதில்லை.  இந்த உலகம் ஒரு பள்ளிக்கூடம்தான் என்றாலும் முட்டாள்கள் இங்கு எதுவுமே கற்பதில்லை. ஏதும் தெரியாமல் தொடங்கும் வாழ்க்கை எல்லாம் தெரியும்போது முடிந்துவிடுகிறது. நாம் யார்? நாம் ஏன் பிறந்தோம்? நம் தனித்திறன் என்ன? நம்மால் என்ன சாதிக்க முடியும்? என நாம் ஒவ்வொருவரும் பல்வேறு கேள்விகளோடுதான் வாழ்கிறோம். ஆனால் பலர் அதற்கான பதில் தெரியாமலேயே மறைந்துவிடுகிறார்கள். ஏனென்றால் இந்தப் பிறப்பே பதில் தெரியாத கேள்வி! மரணமோ கேள்வி கேட்க முடியாத பதில். இந்தப் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நம் வாழ்வை பயனுள்ளதாக்க சிந்தித்தல் தேவையாகிறது. இன்றைய சிந்தனை என்ற இந்த நூல் பல்வேறு சிந்தனைகளின் தொகுப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலில் இன்றைய நாளின் சிறப்பு, திருக்குறள், பழமொழி, பொன்மொழி, இன்று பிறந்தவர், இன்று மறைந்தவர், நாளொரு இணையதளம், ஆங்கிலப் பொன்மொழி என்ற தலைப்புகளில் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு சிந்தனைகள் என பதிவுசெய்யப்பட்டுள்ளன.
      இன்றைய நாளின் சிறப்பு என்ற தலைப்பில், அந்த நாளில் உலக அளவிலோ, சில நாடுகளிலோ கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள் பற்றிய குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் நோக்கம் ஒவ்வொரு நாளுமே கொண்டாடப்படவேண்டியதுதான். என்பதை அறிந்துகொள்வதும். அந்த நாள் குறித்த அடிப்படை அறிவை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதும் ஆகும்.
      திருக்குறள் என்ற தலைப்பில், நாள்தோறும், ஒரு திருக்குறள் ஒரே வரி விளக்கத்துடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வாழ்க்கைக்குத் தேவையான அறக்கருத்துக்களை அழகான பொன்மொழிகளாக வழங்கும், இரண்டு அடிகளைக்கொண்ட திருக்குறளுக்கு ஒரே வரியில் விளக்கம் கூறுவதன் நோக்கம், சமகால மொழிநடையில், ஒரே வரியில்  திருக்குறளின் பெருமைகளை எடுத்தியம்புவதால் யாவரும் எளிமையாக அதன் பொருளைப் புரிந்துகொள்ளவதுடன், அக்குறளின் ஒவ்வொரு சொல்லின் உட்பொருளையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்துவதாகவும் இம்முயற்சி அமைகிறது.
      பழமொழி என்ற தலைப்பில், தமிழரின் அனுபவ மொழியாம் பழமொழி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மூத்தோர் சொல்லும், முது நெல்லிக் கனியும் முதலில் கசக்கும் பிறகு இனிக்கும் என்பார்கள். அதுபோல இன்று அறிவியல், உளவியல் என பல துறைகளில் கூறப்படும் அரிய கருத்துக்களைக்கூட பழமொழிகள் வழியாக அன்றே தமிழர்கள் கூறிச்சென்றுளனர். இப்பழமொழிகளை வாசிக்கும்போது நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் நமக்கு அறிவுரை சொல்லுவது போன்றே இருக்கும்.
     பொன்மொழிகள் என்ற தலைப்பில், பல்வேறு அறிஞர்கள் தம் அறிவின் வெளிப்பாடாகக் கூறிச்சென்ற பொன்மொழிகள் இடம்பெறுகின்றன. இப்பொன்மொழிகள் ஒவ்வொன்றும் நம் வாழ்வில் பின்பற்றத்தக்கனவாக, நம்மை சிந்திக்கச் செய்வனவாகவும் விளங்குகின்றன.
      இன்று பிறந்தவர், இன்று மறைந்தவர் என்ற தலைப்புகளில், பலதுறைகளிலும், பல மொழிகளிலும் சாதனைபடைத்து வரலாற்றில் புகழ்பெற்ற அறிஞர்கள் பெயர்களும், அவர்கள் புகழ்பெற்ற துறை, நாடு ஆகிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. இக்குறிப்புகள், எந்த மொழியிலும், எந்தத்துறையிலும் யாவரும் சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை விதையை விதைப்பதாகவும், அவர்களது பணியை நன்றியுடன் எண்ணிப்பார்ப்பதாகவும் அமைகிறது.
      நாளொரு இணையதளம் என்ற தலைப்பில் ஒவ்வொரு ஒவ்வொரு இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கு வளம்சேர்க்கும், இணையதளங்கள், வலைப்பதிவுகள், தொழில்நுட்பங்கள், தமிழ்ச்சங்கங்கள், தமிழ் ஆய்வுகள், போட்டித்தேர்வுகள், தமிழ் மின்னூல்கள், நூலகங்கள், பொது அறிவு சார்ந்த பல்வேறு இணையதளங்களின் முகவரிகள் குறிப்பிடப்படுகின்றன. இதன் வழி இணையம் சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ளமுடியும்.
      ஆங்கிலப் பொன்மொழிகள் என்ற தலைப்பில் புகழ்பெற்ற பல்வேறு அறிஞர்களின் சிந்தனைகள் இடம்பெறுகின்றன. இப்பொன்மொழிகள், ஒவ்வொன்றும் வாசிப்போர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி, தன்னம்பிக்கை வளர்ப்பதாகவும், சுயமுன்னேற்றமடையச் செய்வதாகவும், அறியாமை இருளைப் போக்கும் ஒளிகளாகவும் திகழ்கின்றன.
      இன்றைய சிந்தனை என்ற தலைப்பில் சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழும் இந்நூல், வாசிப்போர் மனதில் அறிவு என்பது மொழி எல்லைகளைக் கடந்தது என்ற உண்மையை உரைத்து, நாம் ஒவ்வொருவரும் நம் அறியாமையை நீக்கி அறிவை வளர்த்துக்கொள்ளவும் நாம் விரும்பிய துறையில் புகழுடன் வாழவும் துணைநிற்கும் என்று கருதுகிறேன்.
நூல் விலை - ரூபாய் 100

மின்னஞ்சல் - verkalaithedipublication@gmail.com 

அலைபேசி - 9524439008

Post a Comment

Previous Post Next Post